பருத்திவீரன் படத்தால் இயக்குனர் அமீர்க்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாக்கும் இடையே கடுமையான பிரச்சினை போய் கொண்டிருக்கிறது. இருவருமே ஒருவர் மேல் ஒருவர் பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர்.

ஆனால் ஞானவேல்ராஜா இந்த பிரச்சினை குறித்து சமீபத்திய பேட்டியில் அமீரை பற்றி மிகவும் மோசமாக பேசியிருந்தார். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் போன்ற சிறந்த படங்களை இயக்கியவர் அமீர். அப்படிப்பட்ட ஒரு கலைஞனை இப்படி தரம்தாழ்ந்து விமர்சிப்பது கண்டிக்கதக்கது என சமூக வலைத்தளத்தில் பேசி வந்தனர்.
அமீர்க்காக முதல் ஆளாக நடிகரும் இயக்குனருமான சசிகுமார் ஆதரவாக குரல் கொடுத்தார். இது அப்படியே பூதாகரமாக வெடிக்க.. சசிகுமாரை தொடர்ந்து சமுத்திரக்கனி, பொன்வண்ணன், கரு பழனியப்பன், பாரதிராஜா என பலரும் ஞானவேல்ராஜாவை கண்டிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டு அமீர்க்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

இந்நிலையில் ஞானவேல்ராஜா இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பது “பருத்தி வீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே ‘அமீர் அண்ணா’ என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன் அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது.
அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
விரைவில் பருத்திவீரன் தொடர்பான இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
