தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இன்று வெளியாகியிருக்கும் படம் தான் லியோ. விஜய் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் சினிமா விரும்பிகளும் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த லியோ படம் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம் வாருங்கள்.

காஷ்மீரில் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் பார்த்திபன் வாழ்க்கையை ஒரு சம்பவம் திருப்பி போடுகிறது. பார்த்திபன் தான் லியோ தாஸ் என்று பழித்தீர்க்க ஆண்டனி தாஸ் மற்றும் ஹரோல்டு தாஸ் துடிக்கிறார்கள். பார்த்திபன் தான் லியோ தாஸா? பார்த்திபன் குடும்பத்துக்கு என்ன ஆனது? ஆண்டனி தாஸ் மற்றும் ஹரோல்டு தாஸ் என்ன ஆனார்கள்? என்பதே மீதி கதை
மொத்த லியோ படத்தை விஜய் மட்டுமே தன் தோளில் சுமக்கிறார். மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படம் A History Of Violence என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்பதை படத்தின் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார்கள். லியோ படத்தின் பலமே முதல் பாதி தான். கழுதைப்புலி சண்டைக்காட்சி, கஃபே சண்டைக்காட்சி, த்ரிஷா உடனான ரொமான்ஸ் காட்சி என எல்லாமே ரசிக்கும் படியாக இருந்தது.

பார்த்திபன் என்ற கதாப்பாத்திரத்தில் விஜய் நடிக்காமல் வாழ்ந்திருக்கிறார். த்ரிஷா, கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், மிஷ்கின் போன்றோர்கள் அவர்களின் கதாப்பாத்திரத்தில் சரியாக நடித்திருக்கிறார்கள். சாண்டி சைக்கோ தனமான நடிப்பை வெளிப்படுத்தி கவர்ந்து இருக்கிறார். ப்ரியா ஆனந்த் இந்த படத்தில் எதற்கு என்ற கேள்வி எழுகிறது.
இப்படி முதல்பாதி சிறப்பாக செல்ல.. இரண்டாம் பாதி நம்மை சோதிக்கிறது. லியோ தாஸ் என்ற கதாப்பாத்திரம் நம்மை கவரவில்லை என்று தான் சொல்லவேண்டும். மிகவும் மிகையான நடிப்பு.. பழைய விஜய் படங்களின் சாயல்கள் என இது லோகேஷ் படமா என்று யோசிக்க வைக்கிறது. சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் என இவர்களுக்கு படத்தில் பெரிய முக்கியத்துவம் இல்லை.

இது படத்தின் விறுவிறுப்பை குறைத்துவிடுகிறது. மடோனா செபாஸ்டியன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் அது படத்துடன் ஒட்டவில்லை. ஏன் இப்படி ஒரு கதாப்பாத்திரம்? இது படத்திற்கு அவசியமா? என்று பல கேள்விகளை எழுப்புகிறது. ஒரு வலுவான ஃப்ளாஷ்பேக் இல்லாதது படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு. சில காட்சிகள் இதெல்லாம் நம்புறா மாதிரியே இல்லையே என பொறுமையை சோதிக்கிறது.

இரண்டாம் பாதியில் வரும் கார் சேஷிங் காட்சியின் கிராஃபிக்ஸ் முதல்பாதியில் வரும் கழுதைப்புலி காட்சியின் கிராஃபிக்ஸ் அளவுக்கு இல்லை. மேலும் இந்த கார் சேஷிங் காட்சி நம்பும் படியாகவும் இல்லை. படத்தை அவசர அவசரமாக எடுத்தது நன்றாக தெரிகிறது. லோகேஷ்க்கு சிறிது நேரம் கொடுத்து இருந்தால் கண்டிப்பாக இதைவிட தரமாக எடுத்திருப்பார்.
லியோ படம் LCU-வில் தான் வருகிறது என்றாலும் காட்சிகள் பலமாக இல்லை. விஜய் ரசிகர்களை கவர்ந்தாலும் இந்த படம் எல்லார்க்குமே பிடிக்குமா என்பது கேள்விக்குறி. மொத்தத்தில் லியோ லோகேஷ் இதுவரை எடுத்த படங்களில் மிகவும் சுமாரான படம் என்பதே நிதர்சனம்.
லியோ மக்களின் விமர்சனம்..