தொலைக்காட்சி தொடர்களில் தனது பயணத்தை தொடங்கி சினிமாவில் பல துறைகளில் சாதனை படைத்தவர்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் இந்தி சீரியல்கள் மூலம் தன் பயணத்தை துவங்கியவர் விக்ராந்த் மாஸி.
கடந்த 2013ம் ஆண்டில் இருந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்தாலும் 2023ம் ஆண்டு வெளியான 12வது ஃபெயில்(12th fail) படம் விக்ராந்த் மாஸிக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. அதன் பிறகு அனைவராலும் கவனிக்கப்படும் நடிகரானார் விக்ராந்த் மாஸி.

12வது ஃபெயில்(12th fail)படம் ஓடிடி தளத்தில் வெளியாகி அப்படம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது. 2013ல் வெளிவந்த ‘லூடேரா’ படத்தில் அறிமுகமாகி கடந்த 14 வருடங்களாக நடித்து வருகிறார் .
விக்ராந்த் மாஸி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான செக்டர் 36, தி சபர்மதி ரிப்போர்ட் ஆகிய படங்களும் வெற்றி பெற்றன. இதிலும் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ திரைப்படத்திற்கு சில மாநிலங்கள் வரி விலக்கு அளித்துள்ளன.
விக்ராந்த் மாஸி ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அது நிச்சயம் வித்தியாசமாகவும், நன்றாகவும் இருக்கும் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.
இந்த சூழலில் பாலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகரான விக்ராந்த் மாஸ்ஸி நடிப்பில் இருந்து ஓய்வு எடுப்பதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: ”கடந்த சில ஆண்டுகள் எனக்கு சிறப்பானவையாக அமைந்தன. உங்களின் ஆதரவுக்கு எனது நன்றிகள். ஆனால் நான் முன்னோக்கி நகரும் இந்த முடிவை, மறுபரிசீலனை செய்து ஒரு கணவனாக, தந்தையாக, மகனாக, நடிகனாக, மீண்டும் குடும்பத்தை நோக்கி திரும்ப நினைக்கிறேன். எனவே வரும் 2025-ல் ஆண்டில் நாம் அனைவரும் கடைசியாக ஒருமுறை ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்வோம். கடைசி 2 படங்கள் பல்வேறு நினைவுகளை கொடுத்துச் சென்றன. அனைவருக்கும் நன்றிகள்” என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரசிகர்கள் கூறியிருப்பதாவது, பாலிவுட்டில் சிறப்பாக நடிக்கும் நடிகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதில் நீங்களும் ஒருவர். உங்களை போன்று வேறு யாரும் இல்லை. அப்படி இருக்கும்போது திடீரென்று ஓய்வை அறிவித்தது ஏன்?. பாலிவுட்டில் இருக்கும் பெரியாட்களின் பிரஷரா ? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படம் முஸ்லிம்களுக்கு எதிராக சித்தரித்துள்ளது என விமர்சனங்கள் எழுந்தது இதன் எதிரொலியாக இந்த முடிவை விக்ராந்த் மாஸி எடுத்திருக்கலாம் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.