2024-ம் ஆண்டில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவரும் என்ற காரணத்தால் இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு சிறப்பான ஆண்டு என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரும் ஏமாற்றத்தையே தந்தது. இந்த ஆண்டில் இதுவரையில் 200-க்கு மேற்பட்ட படங்கள் வெளிவந்துள்ள நிலையில் அதிக பட்சமாக 20 படங்கள் வரையில்தான் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற படங்களாக அமைந்தன.
இந்த ஆண்டில் அதிகபட்ச வசூலாக விஜய் நடித்து வெளிவந்த ‘தி கோட்’ படம் 450 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதற்கடுத்த இடத்தில் 310 கோடியை சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ படம். ரஜினி நடித்த ‘வேட்டையன்’, கமல் நடித்த ‘இந்தியன் 2’ தனுஷ் நடித்த ‘ராயன்’,விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’, விக்ரம் நடித்த ‘தங்கலான்’ ஆகிய படங்கள் 100 கோடியைக் கடந்தன.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி கடந்த 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் ‘’கங்குவா ‘’.
படம் வெளியாவதற்கு முன்னதாக ப்ரோமோஷன்களில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இந்தப் படம் கண்டிப்பாக 2,000 கோடி ரூபாயை வசூலிக்கும் என்றார். அதேபோல் சூர்யாவும் ப்ரோமோஷனில் பேசியபோது, ‘கங்குவா படத்தை பார்க்கும்போது இந்திய திரையுலமே இப்படி ஒரு படத்தை தமிழில் எடுக்க முடியுமா என்று வாயை பிளந்து பார்ப்பார்கள்’ என்று கூறினார்.

இப்படி ஆளாளுக்கு ஹைப் ஏற்ற, படத்தை பார்த்த ரசிகர்கள் கழுவி ஊற்றிவிட்டார்கள். இந்தப் படத்துக்குத்தான் இவ்வளவு ஹைப்பா; படத்தில் ஒன்றுமே இல்லையே என்றெல்லாம் அடித்து துவைத்தனர்.
இந்த நிலையில் நெகட்டிவ் விமர்சனங்கள் ஓவராக வந்துகொண்டிருந்த சூழலில் சூர்யாவின் மனைவி ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘கங்குவா படத்துக்கு வேண்டுமென்றே நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புகின்றனர். படத்தில் உள்ள நல்ல விஷயங்களை எல்லாம் மறந்துவிட்டார்கள்’ என்று காட்டமாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் படம் வெளியான 11 நாட்களில் இதுவரை மொத்தமாகவே 108 கோடி ரூபாய் வசூலைத் தான் பெற்றுள்ளது. இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் 100 கோடியைக் கடந்த 9வது படமாக இப்படம் அந்தப் பட்டியலில் இணைகிறது.

உலகளவில் ரூ. 108 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில், ரூ. 100 கோடிக்கும் மேல் இப்படம் நஷ்டம் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.இந்த நிலையில், இதுகுறித்து இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான சித்ரா லக்ஷ்மணன் உண்மையை உடைத்துள்ளார்.
அவர் கூறுகையில் : “கங்குவா படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 170. படம் வெளிவருவதற்கு முன்பே ஓடிடி, சாட்டிலைட் விற்பனை செய்யப்பட்டு விட்டது. இதன்மூலம் கணிசமான தொகை தயாரிப்பாளருக்கு கிடைத்துவிட்டது. திரையரங்கம் மூலம் பெரிய தொகை வசூலாக வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. தோல்வி படமாக அமைந்தது. அப்படி இருந்தும் கூட படத்திற்கு பெரிய நஷ்டம் எதுவும் ஏற்படவில்லை” எனறு கூறியுள்ளார்.